frenzyeenfrenzyee Frenzyee Caroline

இந்தக் கதை ஒரு கவிஞனின் உணர்ச்சி வெளிப்பாடு....அவனது நண்பனின் பெருமையின் வெளிப்பாடு...இவற்றெல்லாம் தாண்டி ஏதோ ஒரு கவலையும் அவர்களிடையே வியாபித்ததிருந்தது... அது என்ன என்பதை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...


Короткий рассказ Всех возростов.

#ஒர-க-ப-ப-ய-ன #கத
Короткий рассказ
1
2.7k ПРОСМОТРОВ
Завершено
reading time
AA Поделиться

ஒரு கோப்பையின் கதை

அன்று தைத் திங்கள் மூன்றாம் நாள். அரங்கம் முழுவதும் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அதிரி புதிரியான சூழலில் அரங்கமே திக்கு முக்காடிக் கொண்டிருந்தது. அப்படி என்னதான் கண்டுவிட்டதோ அந்த அரங்கம், ஏன் இந்த சலசலப்பு? யாரிடம் கேட்பது என்ற குழப்பத்தில் துடித்தது ஓர் மனம்.

அன்று எதோ ஒரு வருத்தம் அவனிடம் படர்ந்து, வெகுவாக அவனது நிம்மதியை அலைக்கழித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தான். தன் நண்பனின் பேச்சினைக் கேட்க முடியாமல் போனதோடு சேர்த்து, வேறு ஏதோ ஒன்றும் அவனது மனதை வியாபித்திருந்தது.

அப்பொழுதுதான், கவிஞர் புகழேந்தியுடன் ரசிகர்கள் அலைபேசிகளில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதையும் மற்றும் காணொளிகளாகப் பதிவு செய்வதனையும் காண முடிந்தது. சட்டென்று ஒரு ஞான ஒளி. அரங்கத்தில் ஆங்காங்கே மின்னொளிகளைக் கண்டதும், அந்த மின்னொளியில் ஆழ்ந்தது அவனது கண்கள் மட்டுமல்ல, அவனது அகமும் தான்.

இது தகவல் பரிமாற்ற யுகமாயிற்றே. நினைவுகளுக்கு ஏற்றாற்போல் தங்களைத் தகவமைத்துக் கொள்வதைக் காட்டிலும் நினைவுகளைத் தரவுகளாகத் தக்க வைத்துக் கொள்வது தானே தற்போதைய வழக்கமாயிருந்து வருகின்றது. அதில் தானே இன்றைய சமூகம் அதிக முனைப்பைக் காட்டி வருகின்றது. எது எப்படியோ, அதுவே அவனுக்குச் சாதகமாகவும் அமைந்துவிட்டதை எண்ணிப் பூரித்தது அவன் மனம்.

அந்த திளைப்புடனே, தன் அருகாமையில் இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தான். தன்னை அந்தப் பேச்சாளரின் உற்றத் தோழன் எனவும் அறிமுகம் செய்து கொண்டான். மேலும் தனக்கு ஓர் உதவித் தேவைப்படுவதாகவும் கூறினான். அவரது அலைபேசியில் தனது நண்பனின் உரையை காணொளியாகப் பதிவு செய்திருந்தால், தனக்கு ஊடலை மூலம் பகிருமாறுக் கேட்டுக் கொண்டான்.

"சரி, ஆகட்டும். இதோ அனுப்புகிறேன்."என்ற மறுமொழி அவனது ஆழ்மனதின் கதவுகளைத் திறந்து,"இன்பத் தேன் வந்துப் பாயுது காதினிலே..."என்ற பாரதியாரின் வரிகளை மனதில் கூவிச் சென்றதாய் உணர்ந்தான்.

ஆம், நேரம் காட்டும் கடிகாரத்தின் கதவுகளைத் திறந்து சிறு பறவைகள் கூவிச் சென்ற மணியோசையினை நினைவு படுத்தியதைப் போலவே அவன் உணர்ந்ததாகக் கூறினான்.

தனது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டான். "கவிஞரின் நண்பன் என்று அவ்வப்பொழுது நினைவூட்டுகிறீர் போலும்!?" என்று வினவினான் அந்தப் பார்வையாளன். அதற்கு, "கம்பன் வீட்டுக் கட்டுத் தரையும் கவி பாடும் என்பதைப் போல... கட்டுத்தரைக்கே அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால்... நான் மனிதனாயிற்றே! அதுவும் அந்த கவிஞர் என் பாலிய நண்பராயிற்றே!" என்று தழுதழுத்த குரலில் தன் உணர்ச்சிப் பெருக்கினை வெளிப்படுத்தினான்.

"தங்கள் பீடீகை எல்லாம் பலமாகத்தான் இருக்கிறது. தங்கள் நண்பரைப் போலவே..." என்று தனது பூரிப்பை வெளிப்படுத்தினார் அந்த நபர். "உங்கள் நண்பர், கண்ணதாசனின் பாடல் வரிகளின் முன்னோட்டம் தான் தன் வாழ்க்கையும், தனது துணைவியாரும் என்று புகழ்ந்து மனதை நெகிழ்த்திவிட்டார் என்று கூறுவது மிகையாகாது. அதற்கான காரணத்தை இடைவேளைக்குப் பின் பகிர்வதாக எங்களின் பேரார்வத்திற்கு வேகத்தடையையும் போட்டு, எங்களிடம் சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்." என்று கூறினான் அந்த ரசிகன்.

அதைக்கேட்டதும் தன் நண்பனுக்காகவும், தங்கைக்காகவும், தன்னையும் மீறி, அவனது கண்கள் ஆனந்த மழைச் சொரிந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே தோன்றியது. ஏனென்றால் புகழேந்தி கூறியது அவனது மனைவியாகியத் தன் தங்கையைத் தான் என்ற பெருமிதத்தின் வெளிப்பாடே அவனது கண்ணீர்த் துளிகள். அப்படி என்றால் அவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துக் கொண்டார்களா என்று அந்த ரசிகர் கேட்க,

"அதற்கும் ஒரு படி மேல். அவர்கள் இருவரும் எழுத்தாக்கம் என்னும் கலையிலே சங்கமித்தார்கள் என்று கூறினால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்." என்று பெருமிதத்துடன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினான்.

அவர்களைப் பற்றி மேலும் கூறுங்களேன். ஆவலாக இருக்கிறது என்று அந்த நபர் கேட்க, அவனும் தன் நண்பனின் கதையைப் பற்றி மேலும் கூறத் தொடங்கினான். எதனைக் கூறுவது என்ற வண்ணம் அவனது எண்ணங்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தது.

"என் தங்கையின் இலக்கிய ஆர்வத்தைத் தனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட என் நண்பனை சிலாகிப்பதா அல்லது என் நன்பணின் வாழ்க்கைப்பணியில் தன்னை ரசிகையாகவே தன் வாழ் நாள் முழுவதையும் அர்பணித்துக் கொண்டாடிய என் தங்கையை சிலாகிப்பதா என்பதை அறியாத தற்குறி தானே நான்." என்று கூறித் தன் கண்ணீர் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பதிவு செய்தான்.

அதற்கு அந்த நபர், "அப்படியென்றால் இந்த அரங்கத்தில் தான் தங்களுடைய தங்கையும், எங்கள் கவிஞரின் துணைவியாருமான அந்த புண்ணியவதியும் இருக்கிறாரா?" என்று அந்த ரசிகனும் மிகுந்த ஆர்வத்துடன் வினவினான். அதற்கு, "அந்த அளவுக்குப் புண்ணியம் செய்யததாலோ என்னவோ தான், அவளை இறைவன் சீக்கிரமாகவே தன்னுடன் அழைத்துக் கொண்டார் போலும். அவளது பயணம் என் நண்பனுக்காகவாவது தொடர்ந்திருந்திருக்கலாம் அல்லவா?" என்று அங்கலாய்த்துத் தன் வருத்தத்தை வெளிப்படுத்தினான். அதற்கு அந்தப் பார்வையாளனும், "கவலை வேண்டாம். அமைதி கொள்ளுங்கள்." என்று ஆசுவாசப்படுத்தினான்.

அவனும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "ஆனால், ஒரு வகையில் நான் கொடுத்து வைத்தவன் என்று தான் கூற வேண்டும். இதனைத் தங்கை வாய்க்கப் பெற்ற ஒருவனால் மட்டுமே உணர முடியும். திருமணத்திற்குப் பிறகு, தன் மனைவியை அவளது அண்ணனிடமிருந்துத் தனிமைப் படுத்துவது தான், பெருவாரியான அண்ணன்களின் சாபக்கேடான வாழ்க்கையாக இருக்கும். அந்த வகையில் நான் மிகவும் பாக்கியசாலி என்று முழு மனதாக மார் தட்டிப் பெருமைக் கொள்ளும் அளவிற்கு என் நண்பன் ஒரு நல்லக் கணவனாகவும் தன்னைக் கடைசி வரை நிலை நிறுத்திக் கொண்டான் என்றால் அது மிகையாகாது." என்று மனமுருகித் தன் நண்பனைப் பாராட்டினான்.

"என் நண்பனுடைய பேச்சிலும், எழுத்திலும் என் தங்கை இன்னும் வாழ்வதாகவே உணர்கிறேன். இன்றளவும் என் தங்கை என் நண்பனின் இதயத்தில் வாழ்ந்துக் கொண்டுத் தான் இருக்கின்றாள். அவர் பேச்சினிலே என் தங்கையை, என் கண் முன்னே கொண்டு வந்து நிற்க வைத்துவிடுகிறாா். அதே அளவிற்கு என் நண்பனின் மேன்மையானக் குணத்தைக் கண்டு மெய் சிலிர்க்கிறேன்." என்றுத் தன்னை மறந்து தன் உணர்வுகளைப் பகிர்ந்துக் கொண்டிருந்தான். இவ்வாறு ஒருவருக்கொருவர் உளமுருகிப் பாராட்டுவதைக் கேட்டால், கேட்பவர்கள் விழிகளும் சற்று வியர்க்கத் தான் செய்யும் போலும் என்றுத் தன் மெய் சிலிர்க்கும் தருணத்தைப் பகிர்ந்துக் கொண்டான் அந்தப் பார்வையாளன்.

மேலும், அந்தப் பார்வையாளன், "அன்பு பாராட்டுதல் என்பதனின் நேர்மறையான முப்பரிமாண நிலைபாட்டைத் தன் கண்முன்னே கொண்டு வரும் மாயம் அறிந்தவர்கள் தான் தாங்கள் மூவரும்." என்று கூறினான். அதற்காகவாவது, தான் நன்றி கூறியே ஆக வேண்டும் என்று தன் உணர்வின் எழுச்சியினை வெளிப்படுத்தினான் அந்த ரசிகன்.

அப்பொழுது, சட்டென்று அரங்கமே அமைதியானது. தொகுப்பாளினியும் பேசத் துவங்கினார். கவிஞர், எழுத்தாளருமான புகழேந்தி அவர்களை, பேச்சினைத் தொடர வருமாறு பணிவன்புடன் அழைப்பதாகவும் தெரிவித்தார்.

தன் நண்பன் பேசப் போகிறான் என்பதை எண்ணிக் கொண்டிருக்கையில், அவன் மனதில் சிறு சலசலப்பு எட்டிப் பார்க்கத் துவங்கியது. "ஒளிரும் வண்ணங்களைச் சிறைப் பிடிக்கும் வெள்ளைக் காகிதமாய் நானும் சற்று மாறேனோ!" என்று அவன் உள்ளம் பதறியது. "அது எனுக்கு மட்டுமே தெரிந்த உயிர்த் துடிப்பு." இவ்வாறெல்லாம் பிதற்றியது அவன் மனம்.

கவிஞரும் தன் இருக்கையிலிருந்து எழுந்து மேடைக்குச் சென்றுப் பேசத் தொடங்கினார். "இடைவேளைக்கு முன்பு கண்ணதாசன் எழுதியப் பாடல் என் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது எப்படி என்று பேசிக் கொண்டிருந்தோம் அல்லவா. ஆம், ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு. நான் ஒரு எழுத்தாக்கப் போட்டியில் வென்ற கோப்பை தான், எனக்கு ரசிகையும், துணைவியுமான என் மனைவியைப் பெற்றுத் தந்தது. என்னை என் துணைவியிடம் அறிமுகப்படுத்தியது, நான் எழுத்தாளனாய் வென்று வந்த அந்த ஒரு கோப்பை என்று தான் சொல்ல வேண்டும். அதுவரை என் துணைவியாருக்குப் படைப்புகளின் மேல் இருந்த ஆர்வம் அதற்குப் பிறகு எனது படைப்புகளின் பக்கமும் ஈர்த்தது. எனது படைப்புகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் ரசிகை என்பதையும் தாண்டி, எனது துணைவியையும் எனக்கு அடையாளம் காண வைத்தது." என்று கூறி முடிப்பதற்கு முன் அரங்கமே கரகோஷத்தில் ஆழ்ந்தது.

"ஒரு கோப்பை மூன்று இதயங்களைக் கொள்ளையிட்ட வரலாற்றுச் சாதனைச் சின்னமாகவே நான் அதனைக் காண்கிறேன். அந்த மூன்றாவது இதயம் என் துணைவியாரின் அண்ணன் மட்டுமல்ல என் உயிர்த் தோழனும் கூட. நானும், என் துணைவியாரும் கடந்து வந்தப் பாதையில் என்றும் துணையாக மட்டும் அல்லாது எங்களது கனவுக் கோட்டையின் தூண்களாகவும் இருந்த தன்னலமற்ற ஓர் உயர்ந்த உள்ளம் கொண்டவர் தான் எனது நண்பன் மற்றும் அவளின் உத்தம உடன்பிறப்பு." என்று பெருமையுடன் கூறினார்.

கவிஞர் மேலும் தொடர்ந்தார். "ஒரு கோல மயில் என் துணையிருப்பு. மயில் எப்படி மழை வந்தால் தோகை விரித்து ஆடுமோ, அது மாதிரி என் கவிப்பயணத்திற்கு எதிர்மறையான கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும், எப்போதும் தன் பேச்சாற்றலால், அவர்களின் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை எதிர்த்து வாதிட்டு, எதிரியின் மனதையும் மாற்றும் திறமைக்குப் பெயர் போனவளாயிற்றே. அத்தகைய பெருமைக்குரியவளைத் துணைவி என்று கூறுவது தானே பொருத்தமானதாக இருக்கும்." என்றும் முன்மொழிந்தார்.

அப்படிப்பட்டவளுக்குத் தன்னால் செய்ய முடிந்தக் கைமாறு வேறு என்னவாக இருக்க முடியும். தன் வேலையையும், கவியையும் ஒன்றை ஒன்று பாதிக்காமல் கொண்டுச் சென்று, தன் உறவினர்களின் கூற்றை உடைத்தெறிய வேண்டும் என்ற வைராக்கியம் தான் இன்று வரைத் தன் துணையாக நிற்கிறது என்று சொன்னதும் அவருடையப் பெருமித உணர்விற்கு எதிர்மறைச் சாயம் பூச நினைக்கும் எதிரிகளுக்கும் சிறு சஞ்சலம் பிறப்பதில் வியப்பொன்றுமில்லையே, அவரது அன்பின் உரு கண்டு.

" அன்புடையீர், மதம், மொழி, நாடு, ஜாதி, இனம் என்று பலப் பாகுபாடுகளை எதிர்த்துப் போரிடும் அதே வேளையில் தான் நன்மை, தீமை; நல்லவர் தீயவர் என்றப் பாகுபாடுகளும் சேர்ந்துக் கொண்டு, நம் சுமைகளைக்கூட்டி விடுகின்றதே. அட இங்குமா என்ற அங்கலாய்ப்பில் சோர்ந்தே போகிறோமல்லவா? கவலைக் கடலில் மூழ்கிவிடக் கூடாது என்று தான் கோவிலுக்குச் செல்கிறோம். ஆனால் அங்கும் தொல்லைகள் தொடரந்தால் யாரைக் குற்றம் காண்பது. அது போன்றுத் தான், சமுதாயத்தின் பிரிவினைகளிலிருந்துத் தப்பிக்க நினைக்கும் போது நன்மை, தீமை என்றப் பாகுபாட்டில் சிக்கித் தவிக்கத்தான் வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம் பகுத்துணர்வதற்கும், பிரித்துணர்வதற்கும் உள்ள வேறுபாட்டை எதிர்கொள்ளும் மனப்பாங்கினை, நாம் பிரித்தறிய முற்படுவதில்லை." மேலும் பேச்சினைத் தொடர்ந்தார் கவிஞர்.

"இட ஒதுக்கீட்டுக்காகப் போராடும் அதே வேளையில் ஒரு துளியேனும், பகுப்புடைமையின் முக்கியத்துவத்தையும் உணர்வதற்கும் வித்திட வேண்டும் என்பதை மறந்து விடுகிறோமல்லவா. மரங்களையும், விலங்குகளையும் கூட பிரிவினையோடு தான் அறிகிறோம். அது பரிநமித்தலின் அறிவியலை புரிந்து கொள்வதற்கு மட்டுமே. அதைப் போன்று மனிதர்களின் பிரிவினையும் கூட சமுதாயம் பரிநமித்தலின் புரிந்துணர்வதற்கு மட்டுமே என்பதை உணரத் தவறிவிடுகிறோம். பிரிவினைப் பாராட்டுதல் என்பது வேறு, பகுத்து ஆராய்வதென்பது வேறு. இதனைப் பகுத்தறிவு, பகுப்பாய்வு எனவும் கூற முற்படலாம்."

"நலன் விரும்பிகளே, தெளிந்து கொள்ளுங்கள்!

ஏன் இந்தப் பாகுபாடு.

நன்மை, தீமை என்பது பகுத்துணரப்படுகிறதா அல்லது பிரித்துணரப்படுகிறதா?

பிரிவினை என்பது எங்கு தான் இல்லை. அங்கு எங்களுக்கு ஓர் இடம் வேண்டும் என்று விளம்பும் கூட்டம் ஆங்காங்கே அல்ல, பெருவாரியாகவே எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கின்றது. நாம் தேடும் கேள்விகளுக்கான பதில் பல நேரங்களில் சற்றே வேறு ஒரு பரிமாணங்களில் தான் நமக்கு தரிசனம் கொடுக்கும் என்பதைச் சரியாகப் பகுத்துணர்ந்துள்ளோமா?

கவிஞர் மேலும் தொடர்ந்தார். "இது போன்ற கேள்விகளால், அவ்வப்பொழுது எழும் எண்ணங்களின் எழுச்சியினை உணரத்தான் வேண்டியிருக்கிறது. அதுவே காலத்தின் கட்டாயம். ஆனால் அதனை அங்கிகரிக்க, நம் மனம் ஏனோ மறுத்து விடுகின்றது. அதற்குக் காரணங்கள் பல ஆயிரங்களுக்கும் மேல் நீண்டுக் கொண்டே செல்கிற அதே தருணத்தில் தான், அதனைச் சரியாக உள்வாங்கி அதற்கானத் தீர்வை நோக்கி எடுத்து வைக்கும் அடுத்த சில அடிகளிலேயே, முரண்பாட்டு மூட்டைகளோடுப் பயணிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறோம். அதிலே, நாம் கவனிக்க மறுப்பதும் தான் என்னவோ? நாம் தேடும் தீர்வினைகள் சற்று தூரம் என்ற நிலையிலிருந்து நெடுந்தூரப் பயணமாக மாறுகிறத் தருணங்களை உணர மறுப்பதுவும் தான் ஏனோ?"

"மனிதர்கள் நிலத்தில் வாழ்வதற்குப் பழகிப்போனவர்கள். கடலைக் கையாள்வதிலும் உள்ள சவால்களைச் சந்தித்தவர்கள். கடல் நீர் கால்களை வருடிச் செல்வதற்கு ஏற்றார் போல் உள்ள தூரத்தில் நாம் இருக்கும் வரை பாதுகாவலானச் சூழ்நிலையில் நிற்க இயலும். சற்று முன்னேறி அலைகளுடனே பயணிக்க நினைத்தால், சற்றே மூச்சடக்கித் தான் நீந்தியாக வேண்டும். அதுவே உயிர் பிழைக்கும் மாா்க்கம். கடல் அலைகளில் நின்று பயணிக்க முடியாது தான். ஆனால் மிதவைப் பலகைக் கொண்டு அலை அளாவிச் செல்ல முடியும் தானே. அப்பலகையில் நின்றும், சற்றே உட்கார்ந்தார் போல் பயணிக்க முடியும் தானே." என்று அவர் கூறும் விளக்கத்தின் காரணம் என்னவாக இருக்க முடியும் என்று அனைவரும் இருக்கையின் நுனியில் காத்துக்கிடந்தனர்.

பின்பு அவர், "கவலைகளும் கூட அந்த ரகம் தான். அவை கால்களை வருடிச் செல்லும் கடல் அலைகளைப் போல் இருந்தால் மட்டுமே, நாம் நிலைத்து நிற்க முடியும். பாதுகாப்பான சூழலாக அமையும். அதிலே எப்பொழுதுமே மூழ்கி இருக்க நினைத்தால், குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டுமே அது சாத்தியப்படும். அதற்குப் பின்பும், தம்மையோ, மற்றவரையோ அதிலே கட்டுண்டு வைக்க நினைத்தால், அது பெருஞ்சுமையாகவோ அல்லது தீமையாகவோத் தான் உருவெடுக்கும். எதற்கும் எல்லைகள் உண்டு. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் அல்லவா. விருந்தாகினும், மருந்தாகினும் மூன்று நாட்கள் தான் என்பதனை உணர்ந்தவர்கள் தானா நாம். அதற்குப் பிறகும் வரையறுக்கப்படாமல் தொடருமாயின், அது நன்மையில் சேராது என்று உணர்ந்திருக்கிறோமா என்றால், சற்றே சிந்திக்க வேண்டித்தான் இருக்கிறது."

இவற்றையெல்லாம் அவர் எடுத்துச் சொல்வதற்குக் காரணத்தைப் பார்வையாளர்கள் யூகித்திருப்பார்கள் என நம்பினார். கவலை என்று குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடக் கூடாது என்று அறிவுறித்தினார்.

"அது போல, வரும் துன்பங்களை எதிர்கொள்ளும் பொழுது உதவிகளும் நம்மைத் தேடி வரும். ஆனால் அதை உணர, நாம் நம்மை பண்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா? தன் துணைவி இல்லை என்பதற்காக மதுவுக்கு அடிமையாகிச் சிக்கித் தவிக்கும் நெஞ்சங்களுக்கு ஒரு கேள்வி. அவரவர் தத்தம் துணைவிக்கு இடம் கொடுத்த இதயத்தில் மதுவை வைக்க வேண்டுமா? துணைவியை மறக்க முடியாத வலியை விட மதுவை மறக்க நினைக்கும் வலி பெரியதா? நன்கு சிந்தியுங்கள். எந்தக் கோப்பையில் நம் குடி விளங்கும் என்று சற்றே பகுப்பாய்வு செய்யுங்கள்." என்று அனைவரையும் சிந்திக்கத் தூண்டினார்.

"பகுப்புடைமை. தெரிந்துக் கொள்ளுங்கள் நலன் விரும்பிகளே. தெளிந்தும் கொள்ளுங்கள். அதுவே நிமிடத்திற்கு நிமிடம் மாற்றத்திற்கு உட்படும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு, மாறாது என்றும் நிலைத்திருக்கக் கூடியத் திறவுகோல் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். இச்சமுதாயத்தின் நலன் விரும்பிகளாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பும் தன்னார்வளர்களே, பகுத்தாராய்வதே பகுப்புடைமை என்று சூளுரை ஆற்றுங்களேன். என் கடமை, நான் துவக்கி வைத்துள்ளேன். செஞ்சுடரை ஏந்திச் செல்ல வாருங்களேன். போகுமிடம் வெகு தூரமில்லை, ஆயினும் செஞ்சுடரைக் கைமாற்றி அனைவரின் பங்களிப்பை வெளிப்படுத்த ஒன்று கூடுங்களேன். சமத்துவம் காண வாருங்களேன். சமுதாயத்தைக் கட்டமைக்க ஒன்று கூடுங்களேன்." என்று உச்சகட்ட எழுச்சியோடு பேசினார்.

இறுதி காலம் வரை தனதுப் படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் முதல் திறனாய்வாளராகவும், ரசிகையாகவும் ஒன்றை ஒன்று பாதிக்காத வண்ணம் தன்னுடன் துணை நின்றவள், அன்று தன்னுடன் இல்லை என்று சொல்லத் தன்னால் இயலாது. அவள் என்றுமே நினைவுகளாகவே தன்னை நிழல் போல் தொடருகின்றாள். தான் எழுதிய புத்தகத்தின் வாயிலாக இன்றும் தன்னுடன் வாழ்ந்துக் கொண்டுத் தான் இருக்கிறாள் என்றுக் கூறி அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளைக் கொண்டுவிட்டார் என்பதை அனைவரின் ஆராவாரமும், கைத்தட்டல்களும் மற்றுமொரு முறை உறுதிப் படுத்தியது.

"அனைவரின் ஆசிகளும் தன்னைப் போன்று கலை உலகில் பயணிப்பவர்களுக்குத் தேவை என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். தங்கள் ரசிப்புத் தன்மை தான், தன்னைப் போன்றவரின் கற்பனைத் திறனுக்கானத் திறவுகோல். என்றும் தங்களின் நல்லாசியுடன் விடை பெறுகிறேன்." என்று அவர் உரையினை முடித்த மாத்திரத்தில், அரங்கிலுள்ள அனைவரும் எழுந்து நின்று ஆராவாரம் செய்து, அந்த அரங்கையே அதிரச் செய்தனர்.

நன்றியுரை கூறி முடித்தப் பிறகு அரங்களிலிருந்து அனைவரும் அவர் சொன்னக் கருத்துக்களோடுக் கலையத் தொடங்கினர். அவர்கள் மனதில் கவிஞரின் வார்த்தைகள் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருந்தது.

அந்தப் பார்வையாளனும், அன்று தான் அவரைச் சந்தித்ததால் தான் தன்னுடைய கவிஞரின் ஆழமான உணர்வுகளை அறிய வாய்ப்புக் கிடைத்ததாகவும் கூறிப் பெருமிதம் கொண்டார். அந்தப் பார்வையாளனும் கவிஞரின் நண்பரும் பிரியா விடைக் கொடுத்து அரங்கை விட்டுக் கனத்த இதயத்தோடுப் பிரிந்து சென்றனர்.

10 ноября 2023 г. 18:45 0 Отчет Добавить Подписаться
0
Конец

Об авторе

Прокомментируйте

Отправить!
Нет комментариев. Будьте первым!
~